நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில், கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்னும் அரசாங்க நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.
சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து ஒட்டிய கரோனா நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில் "கமல்ஹாசன் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கமலின் பழைய முகவரி எனத் தெரியாமல் பாஸ்போர்ட் முகவரியைக் கொண்டு நோட்டீஸ் ஒட்டினர். கமல்ஹாசன் அங்கு வசிக்கவில்லை எனத் தெரிந்ததும் கரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் கமல்ஹாசனுக்கு கரோனா வைரஸ் என்று தகவல் பரவியதால் அதற்கு மறுப்பு தெரிவித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாகத் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் செய்தியாளர்கள், செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.