Skip to main content

“அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” - ஜீ.வி.பிரகாஷ்

Published on 24/01/2025 | Edited on 24/01/2025
gv prakash about maharashtra train accident

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் கடந்த 22ஆம் தேதி இயங்கியது. அப்போது இந்த ரயில் பயணி ஒருவரால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அவர் இரயில் பெட்டிகளில் தீப்பிடித்ததாக வந்த பொய் செய்திகளின் அடிப்படையில் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தங்கள் ரயில் பெட்டிகளில் இருந்து வெளியேறிய பயணிகள் மற்றொரு தண்டவாளத்தில் குதித்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் குதித்து சென்ற பயணிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாகப் பலியாகினர். 

இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “லக்னோவ் - டெல்லி இடையேயான ரயிலில் ஒரு பெட்டியில் தீ பரவியதாக யாரோ பரப்பி விட்ட பொய் தகவலை நம்பி, அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்தி விட்டு இறங்கி தப்பிக்க முயன்ற பயணிகளில் 15 க்கும் மேற்பட்டோர் எதிரில் வந்த பெங்களூரு ரயிலில் அடிபட்ட இறந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டுகிறேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்