தனுஷ் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இப்படத்தை இயக்குகின்றனர். கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் குறிப்பிட்ட திரையரங்குகளில் வருகிற 15-ஆம் தேதியும், நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 22-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. அதனால் படக்குழு தற்போது ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர் படக்குழு. இந்நிலையில் இந்தியாவில் மும்பையில் நடக்கவுள்ள 'தி கிரே மேன்' படத்தின் பிரீமியர் நிகழ்ச்சிக்காக விரைவில் இந்தியா வரவுள்ளனர் ரூசோ பிரதர்ஸ். இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து தனுஷிடம் உரையாடும் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்கள் படக்குழு.
அந்த வீடியோவில் தனுஷ் , "இப்படத்தில் ஆக்ஷன், அற்புதமான ஸ்டண்ட் காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளன. அற்புதமான நபர்கள் நிறைந்த இப்படத்தில் பணியாற்றியுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ரூசோ பிரதர்ஸுக்கு ஒரு அறிவிப்பு உள்ளது. ஆனால் அதை அவர்கள், நான் பணிபுரிந்த இரண்டு திறமையான நபர்களிடமிருந்து இங்கு கேட்பது நல்லது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் ரூசோ பிரதர்ஸ், "எங்கள் நண்பர் தனுஷை சந்திக்க இந்தியா வருகிறோம். இந்தியா வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சி, விரைவில் சந்திப்போம்" என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.