தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக அறியப்படுபவர் சிரஞ்சீவி . இவர் தனது 67 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனிடையே இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சிவி காட்ஃபாதர் படத்தில் நடித்து வருகிறர். சிரஞ்சிவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இப்படத்தின் ட்ரைலர் படக்குழு வெளியிட்டது.
சிரஞ்சீவி ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட் ராவ் நினைவாக ஹைதராபாத்தில் உள்ள சித்ராபுரி காலனியில் மருத்துவமனை ஒன்றை கட்டவுள்ளார். இதற்கான அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவித்த சிரஞ்சீவி அடுத்தாண்டு தனது பிறந்த நாள் முதல் செயல்படும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு கிரிக்கெட் சங்கம் சிரஞ்சீவி கட்டும் மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் நன்கொடையாக கொடுத்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் தமன் மருத்துவமனை கட்டுவதற்காக இசைக் கச்சேரி நடத்தி பணம் திரட்டி தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, மருத்துவமனை கட்டும் செயலுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தெலுங்கு திரைப்பட நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப் போவதாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ள சகோதரர் சிரஞ்சீவி அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்படத்துறையில் ஏழை தொழிலாளர்களின் நலனுக்காக மற்ற நடிகர்களும் சகோதரர் சிரஞ்சீவியை பின்பற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.