‘கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து ‘தேவராட்டம்’ என்னும் படத்தை இயக்குகிறார் முத்தையா. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிக்க சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபெஃப்ஸி விஜயன் வில்லனாக நடிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரஸன்னா இசையமைத்துள்ளார்.
இயக்குனர் முத்தையா மீது சாதியை மையமாக வைத்து படங்கள் எடுக்கிறார் என்ற விமர்சனம் பலர் முன் வைக்கின்றனர். இதுகுறித்து தேவராட்டம் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார் இயக்குனர் முத்தைய. அவரை தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் பேசியது.
“முத்தையா அண்ண அழுத்தி அழுத்தி சொன்னாரு நான் ஜாதிப் படம் எடுக்கவில்லை என்று, பொய் சொல்கிறார் அது உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். எவ்வளவு முறை பொய் சொல்வார் ஜாதி படம் எடுக்கவில்லை என்று. முக்கியமான விஷயம் என்னவென்றால் இதை பார்க்கும்போது பருத்தி வீரன் படத்தில் வரும் ஒரு காட்சிதான் தோன்றியது. முத்தழகிற்கு அந்த குட்டி பையன் முத்தம் கொடுத்த பின்பு ஊர் பெரியவர்கள் எல்லாம் விசாரிக்க வருவார்கள். அப்போது ஒரு கட்டத்தில் நான்தான் முத்தம் கொடுத்தேன் என்று சொல்லிவிடுவான். அதுபோல முத்தையா அண்ணனும் இன்னும் நான்கு முறை ஒரே கேள்வியை கேட்டிருந்தால் ஆமாம் நான் எடுப்பது ஜாதி படம்தான் என்று சொல்லியிருப்பார். அது அவருடைய வாழ்வியல்.
பா.ரஞ்சித்துடன் அட்டக்கத்தி படம் வேலை செய்தபோது அது அந்த படம், இந்த படம் என்று பலர் சொன்னார்கள். அது அந்த மாதிரியெல்லாம் கிடையாது. ரஞ்சித்துடைய வாழ்க்கை, வாழ்வியலை பிரதிபலித்தது அந்த படம். அவர் வாழ்ந்த இடம், உறவினர்கள், பெற்றோர்கள் அவை அனைத்தையும் காட்சிப்படுத்தியிருப்பார். அவர் என்ன வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்திருந்தாரோ அதை படமாக எடுத்திருப்பார் ரஞ்சித்.அதேபோல முத்தையா அண்ணன் வாழ்ந்த வாழ்க்கை வேறு, கிராமம் வேறு. அதை அவர் காட்டுகிறார். 15 வருடங்களாக சென்னையில் இருக்கிறார் முத்தையா. ஒரு படம் ஹிட் கொடுத்த கிராமத்து இயக்குனர்கள் அடுத்த படத்தில் ஆளே மாறிவிடுவார்கள். ஆனால், அவர் எடுத்த முதல் படம் குட்டி புலி மிகப்பெரிய வெற்றி. இன்றும் அவர் சாதாரணமாகதான் இருக்கிறார். உறவுகளை அழகாக படமாக எடுக்க கூடியவர்களில் சிறந்தவர் ஹரி சார். அவருக்கு பின் முத்தையா அண்ணன் தான்” என்று கூறினார்.