இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த வேண்டும் என்ற வணிக வரித்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது. அதில், “சமூகநீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோவாக இருக்க கூடாது” எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் குவிந்துவருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...
"நடிகர் விஜய் எப்போதுமே பல ஏழை மக்களுக்கு நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகத்தான் இருக்கிறார். பிரதமர் மற்றும் முதலமைச்சரின் கரோனா நிவாரணத்துக்கு நன்கொடை வழங்கியிருக்கிறார். ஏராளமான மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கியிருக்கிறார். அவரது ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறார். ஊடகங்கள் ஒருவரின் குணத்தை அவதூறு செய்யக் கூடாது. நீதிமன்றத்தில் நடந்த விஷயம் நீதிமன்றத்தோடு முடிந்துவிட்டது. விஜய் செய்த உதவிகளை நாம் மறக்கக் கூடாது. கோர்ட்டு விஷயத்தை வைத்து அவர் செய்த நல்ல விஷயங்களை அசிங்கப்படுத்தக் கூடாது. காருக்கு நுழைவு வரியில் இருந்துதான் அவர் விலக்கு கோரியுள்ளார். அதற்கு நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால், அவர் வரியை செலுத்தப்போகிறார். அவ்வளவுதான்" என காயத்ரி ரகுராம் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.