Skip to main content

“திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்...” - பிரபல திரையரங்க உரிமையாளர் உருக்கம்!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

gk cinemas

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் தமிழகத்தில் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. தமிழக அரசு விரைவில் திறக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. 

 

இந்நிலையில் ஜி.கே. சினிமாஸ் திரையரங்கின் உரிமையாளர் ரூபன், திரையரங்கம் திறக்கப்படாதது குறித்துக் கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், "அன்பார்ந்த திரையரங்குக்கு, எனக்கு 4 வயதாக இருந்த போதுதான் எனது முதல் திரையரங்க அனுபவம். இருண்ட அறை, பெரிய திரை, அறை முழுவதும் அந்நியர்கள், முதலில் பயமாக இருந்தது. ஆனால், படம் ஆரம்பித்தவுடன் அங்கு பொங்கிய உற்சாகம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இன்றுவரை அது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.

 

மீண்டும் மீண்டும் உன்னிடம் வரவழைக்கும் நேர்மறை சக்தி இன்னும் இருக்கிறது. நீ காட்டிய வாழ்க்கையை விடப் பெரிதான பிம்பம், என்றுமே பெரிதாகக் கனவு காண வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லித் தந்தது. இருட்டில் நீ காட்டிய வண்ணங்கள் எங்களில் பலருக்குள் இருக்கும் சமூக உணர்வைத் தூண்டிவிட்டது.

 

மக்களிடம் நீ உருவாக்கிய பிணைப்பும் எவ்வளவு வலிமையானது என்றால், திரையில் மக்களுக்குப் பிடித்தவர்கள் யாராவது இறந்தால், நிஜத்தில் லட்சோபலட்சம் மக்கள் கண்ணீர் சிந்தினார்கள்.

 

நிஜ வாழ்க்கையில் சிறக்க ஒவ்வொரு தலைமுறைக்கும் நீ ஊக்கம் தருகிறாய். எங்களின் பலருக்குக் கவலையை மறக்க நீ ஒரு சிகிச்சை. நீ பல நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தாய். ஆனால், இப்போது எந்த நட்சத்திரமும் அவர்களின் வெளிச்சத்தை உன் மீது விழவைக்க விரும்பவில்லை என்பது வருத்தமே.

 

cnc

 

உண்மைக்கும், கற்பனைக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய கோடு நீ. இப்போது அந்தக் கோடு மறைவதைப் போலத் தெரிகிறது. ஆனால் என்ன நடந்தாலும் நாங்கள் உன்னை விட மாட்டோம். நாங்கள் ஒரு சிறிய கூட்டம் தான். ஆனால், தாகம் இருக்கும் கூட்டம்.

 

திரையரங்குகளைக் காப்பாற்ற வேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என அரசாங்கத்தை வேண்டுகிறேன். எங்களில் பலருக்கு இது மட்டுமே ஒரே வாழ்வாதாரம்.

 

அன்புடன்,

ஒரு திரையரங்க உரிமையாளர்

திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்