கிருஷ்ணகுமார் குன்னத், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கடந்த செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.கே, அந்நிகழ்ச்சியின் போது திடீரெனெ உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் தங்கிய விடுதிக்கு சென்றார். விடுதியில் மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது, அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். இவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை நேற்று முதல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே கே.கே-வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கொல்கத்தா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்பு உடற்கூராய்வில் மாரடைப்பால் தான் உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை கொல்கத்தா விமானநிலையத்தில் கே.கே-வின் உடலுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது.
கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் கே.கே-வின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. காலை முதல் ரசிகர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கே.கே-வின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.