ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருக்கும் நிலையில் அவர் மீதும் அவரது கட்சியினர் மீதும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரப்பிவர்கள் மீது அக்கட்சியினர் புகார் கொடுக்க துவங்கியுள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
அண்மையில் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது தெலுங்கு தேச கட்சியின் மண்டல செயலாளர் ராமலிங்கம், தெலுங்கு தேசம் கட்சியையும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு, அவரது மகன் நரா லோகேஷ், மருமகள் ப்ராமினி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரது புகைப்படங்களையும் மார்ஃபிங் செய்து வெளியிட்டு அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியதாக புகார் கூறியிருந்தார். அதனடிப்படையில் மடிப்பாடு காவல்நிலையத்தில் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி தரக்குறைவாக மற்றும் அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகி மஜ்ஜி பத்மாவதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் ஆந்திரா பொம்முரு காவல் நிலையத்தில் ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் மற்றொரு காவல் நிலையத்திலும் ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.