உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான அந்த பிரிவின் ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான '2018' படம் இந்திய சார்பில் அனுப்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த தேர்வுக் குழுவின் உறுப்பினராக இருக்கும் பெப்சி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அவர் பேசுகையில், "மாமன்னன் படத்தில் எமோஷன் அருமையாக இருந்தது. ஆனால் உள்ளே என்ன பேசினோம் என்பதை வெளியில் சொல்ல முடியாது. தேர்ந்தெடுக்கும் போது இந்தியாவில் உள்ள எல்லா இடத்திலிருந்தும் வந்திருந்தாங்க.
இந்தியாவில் இருந்து ஒரு படம் தேர்வாக வேண்டும் எனும்போது, ஒரு தமிழனா உள்ளுக்குள்ள அந்த உணர்வு எக்கச்சக்கமா இருந்தது. ஆனால் எல்லாரும் சேர்ந்து ஒரு விஷயத்தை சொன்னார்கள் என்றால் அதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். திரைப்படம் என்றால் ஒரு ஹீரோ, வில்லன், காமெடியன் என ஒரு தியரி இருக்கிறது. அதை பிரேக் செய்த படம் 2018. இதில் வில்லன் என்று பார்த்தால் அது எமோஷன் தான்.
மேலும் அமெரிக்க ஸ்டைலில் இருக்கக் கூடிய படமாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக இருக்கும். இதில் எல்லாரும் ஒத்துப் போய் ஒட்டுமொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படம் தான் 2018. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ப்ரோமோஷனுக்காக நிறைய பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. அப்படி செய்தால் தான் ஆஸ்கரை கொண்டு வர முடியும். இப்போது தான் இந்திய அரசு நாம் தேர்ந்தெடுக்கிற படத்துக்கு ப்ரோமோஷன் செய்ய ரூ.1 கோடி தர சம்மதித்துள்ளது" என்றார்.