மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், நேற்று காலை காலமானார். லதா மங்கேஷ்கர் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், லதா மங்கேஷ்கர் மறைவு தனக்கும் மிகப்பெரிய இழப்பு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், "இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவு என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அனைவருக்குமே மிகப்பெரிய இழப்பு. நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகர். அந்த வகையில், அவருடைய மரணம் எனக்கும் மிகப்பெரிய இழப்புதான். தன்னுடைய குரலால் 36 மொழிகளில் அனைவரையும் மயங்க வைத்தவர் லதா மங்கேஷ்கர். அவருடைய இசைத்திறமையை பாராட்டி பாரதரத்னா பட்டம், ராஜ்யசபா உறுப்பினர் பதவியை மத்திய அரசு அவருக்கு வழங்கியது. பல்வேறு மொழிகளில் அவர் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் எனக்கு பிடித்த பாடல் 'எந்தன் கண்ணாளன் கரை நோக்கி போகிறான்...' என்ற பாடல்தான். 1956இல் திலீப்குமார் நடிப்பில் வெளியான வண்ணரதம் என்ற டப்பிங் படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் படகில் செல்வார்கள். அப்போது 'எந்தன் கண்ணாளன் கரை நோக்கி போகிறான்... நதியே மெல்ல போ...' என்று மெலடி பாடல் வரும். அந்த பாடலை யூடியூபில் சென்று பாருங்கள். பாடலைக் கேட்டவுடன் மயங்கிவிடுவீர்கள். அவ்வளவு ரசனையுடன் ஆத்மார்த்தமாக லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார். காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு அந்த பாடல் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய மறைவு மிகப்பெரிய துரதிர்ஷ்டம். அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறினார்.