அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 4ஆம் தேதி வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் து.ப. சரவணனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம் உண்டு. அந்த சமயத்தில் எங்கள் ஊரில் பெரிய அளவில் திரையரங்குகள் கிடையாது. டி.டி.எஸ் சவுண்ட்ல படம் பார்க்கணும்னா பாண்டிச்சேரிக்குத்தான் போகணும். மணி சாரின் “உயிரே” படமெல்லாம் பாண்டிச்சேரியில்தான் நான் பார்த்தேன். அப்படியே சினிமா மீது ஆர்வம் அதிகமாக ஆரம்பித்தது. செழியன் சாரின் வருகைக்கு பிறகு உலக படங்கள் அறிமுகமாக ஆரம்பித்தன. டிவிடி வாங்கி உலக படங்கள் நிறைய பார்க்க ஆரம்பித்தேன்.
சின்ன சின்ன படங்களில்தான் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். தனியாக படம் பண்ண வேண்டும் என்று நினைத்தபோது எதுவும் சரியாக அமையவில்லை. முதலில் மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்கும்படி நாம் ஏதாவது செய்ய வேண்டும். எதுவும் செய்யாமல் எனக்கு அது தெரியும் இது தெரியும் என்று வாயால் கூறிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது என்று முடிவெடுத்து குறும்படம் இயக்கினேன். அந்தக் குறும்படமும் நூற்றில் ஒன்றாக இருந்துவிடக்கூடாது. தனித்துவமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து 'எது தேவையோ அதுவே தர்மம்' குறும்படத்தை இயக்கினேன்.
நிறைய பேரோட கவனம் கிடைக்க வேண்டும் என்பதால் இண்டஸ்ட்ரில உள்ள பெரிய 10 இயக்குநர்கள் எனது குறும்படத்தை வெளியிட வேண்டும் என்று விரும்பினேன். ஒவ்வொருவராக சந்தித்து அவர்களிடம் இந்தக் குறும்படத்தை கொடுத்தேன். அப்படித்தான் விஷால் சார் ஆபிஸிலும் கொடுத்தேன். முதலில் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. படத்தை வெளியிட நாங்கள் திட்டமிட்டிருந்த தேதிக்கு ஒருநாளைக்கு முன்பாக விஷால் சாரிடம் இருந்து ஃபோன் வந்தது. குறும்படம் சிறப்பாக இருப்பதாகவும் முழுமையான ஒரு படம் பார்த்த திருப்தி இருப்பதாகவும் கூறினார்.
நான் நடிப்பது மாதிரி ஏதாவது கதை வச்சுருக்கீங்களா என்று கேட்டார். அப்போது என்னிடம் ஒரு கதை ஒன்லைனாக மட்டும் இருந்தது. அவரிடம் கொஞ்சம் டைம் கேட்டு, ஒரு மாதத்தில் முழுக்கதையையும் முடித்து அவரிடம் சென்று சொன்னேன். அவருக்கு கதை ரொம்பவும் பிடித்திருந்தது. அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.
படத்தில் ஆக்ஷன் சீன்ஸ் எல்லாமே ரொம்பவும் மெனக்கெடல் எடுத்து விஷால் சார் செய்தார். டூப் வச்சு பண்ணிக்கலாம்னு மாஸ்டர்ஸ் சொன்னாலும் இல்ல... நானே பண்றேன்னு சொல்லி விஷால் சாரே செய்தார். இந்தப் படத்துலயே அவருக்கு இரண்டு முறை அடிபட்டிருச்சு. ஹைதராபாத்தில் பைட் சீன் எடுக்கும்போது முதுகுல அடிபட்டிருச்சு. இன்னைக்கு வரைக்கும் அந்த வலி அவருக்கு இருக்கு. ஒரே டேக்கில் எல்லாவற்றையும் ஓகே பண்ணி நாம திட்டமிட்டதைவிட வேகமாக முடித்துக்கொடுத்துவிடுவார்.
இந்தப் படத்திற்கு முதலில் சாமானியன் என்றுதான் பெயர் யோசித்து வைத்திருந்தேன். விஷால் சார் மாதிரியான பெரிய நடிகர் நடிக்கும்போது சாமானியன் என்று பெயர் வைத்தால் சிறப்பாக இருக்காது. விஷால் சாரே அதை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால், விஷால் சாருக்கு அந்தத் தலைப்பு ரொம்பவும் பிடித்திருந்தது. அந்தத் தலைப்பை வேறு ஒருவர் பதிவு செய்திருந்ததால் அதை வைக்க முடியவில்லை. பின், வேறொரு தலைப்பு யோசித்தோம். அதையும் இன்னொருவர் பதிவு செய்திருந்தார். அதன் பிறகு வைத்த பெயர்தான் வீரமே வாகை சூடும்".