Skip to main content

"அம்மாவை இழந்தவர்களுக்கு இந்த பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும்" - 'கணம்' பட இயக்குநர் பேச்சு 

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

director Shree Karthick talk about kanam movie mother song

 

அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி நடிகர் சர்வானாந்த் நடிக்கும் கணம்  படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும்  வெளியாக உள்ள இப்படத்தின் அம்மா பாடலை படக்குழு நேற்று (26.1.2022) வெளியிட்டது. உமா தேவியின் வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடல் கேட்பவர்களை கவர்ந்து வருகிறது. 

 

இப்பாடல் குறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், "அம்மா பாடல் தான் ‘கணம்’ படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்.. இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்வேன். 3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம். இந்த பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு  இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின் போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல் தான் உதவியது. 'மன்னன்’ படத்தில் வந்த 'அம்மா என்றழைக்காத…’, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மா.. அம்மா..’ போன்ற சில பாடல்களுக்குப் பிறகு இந்த அம்மா.. பாடல் அனைத்து வயதினரையும் கொண்டாட வைக்கும். தனது அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை  தரும் பாடலாக இது இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்