மலையாள சினிமாவில் பிரபல கதாசிரியர் சச்சி. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தை இயக்கியவர் சச்சி. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது. ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.
'சாக்லெட், ராபின் ஹூட், மேக்கப் மேன், சீனியர்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு சேது என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் சச்சி. இறுதியாக 'டபுள்ஸ்' படம் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து இந்த இணைபிரிந்தது. 2015ஆம் ஆண்டு ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார் சச்சி .
சில தினங்களுக்கு முன்பு சச்சி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஜூபிளி மிஷன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சச்சியின் உடல்நிலை குறித்து ஜூபிளி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "16 ஜூன் 2020 அன்று, சச்சிதானந்தனுக்கு, மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பின் மாரடைப்பு ஏற்பட்டது. பின்பு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வேறு மருத்துவமனையிலிருந்து ஜூபிளி மிஷன் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வென்டிலேட்டர் மற்றும் மற்ற மருத்துவ உதவிகள் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்களும் அவரது சிகிச்சையில் ஈடுபட்டுள்ளனர். அவரது நரம்பியல் செயல்பாடு குறைவாக உள்ளது. மூளைக்குச் செல்லும் பிராண வாயு தடைப்பட்டுள்ளதால் மூளையில் பாதிப்பு இருப்பதும் சி.டி. ஸ்கேனில் தெரியவந்துள்ளது. 48-72 மணி நேர சிகிச்சைக்குப் பின்னரே அவர் நிலை குறித்துக் கணிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மலையாள சினிமாவில் உள்ள சச்சியின் நெருங்கிய நண்பர்கள், மருத்துவ நிபுணர்களைச் சிகிச்சைக்காக வரவழைப்பது குறித்தும், தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் அல்லது விமானம் மூலமாக அவரை வேறு மருத்துவமனைக்கும் மாற்றி சிகிச்சை செய்வது பற்றியும் கலந்தாலோசித்து வருகின்றனர்.