ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி, நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றி முன்னணி இயக்குநராக இருக்கும் எஸ்.ஜே சூர்யா மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் பற்றி பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"நான் இயக்கிய ரட்சகன் படத்தில் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் என்னிடம் உதவி இயக்குநராக இருந்தார்கள். இவர்களில் எஸ். ஜே சூர்யா பெரிய ஆளா வந்துடுவாருன்னு எனக்கு அப்பவே தெரியும். இதை ஏன் நம்பினேன் என்றால் எஸ்.ஜே சூர்யா என்னை மாதிரியே மிகவும் சுறுசுறுப்பானவர். எதற்கும் வெட்கப்படமாட்டார். இப்போ ஒரு பொண்ணுகூட டூவீலரில் போவது சகஜம். ஆனால் எஸ்.ஜே சூர்யா அப்பவே டூவீலரில் ஒரு பெண்ணிடம் லிப்ட் கேட்டு வந்துடுவார். ஏனென்றால் அவருக்கு எதற்காகவும் காத்திருக்க பிடிக்காது. அதனால் பயப்படாமல் பொண்ணாக இருந்தா கூட வெட்கப்படாமல் லிப்ட் கேட்டு வந்துவிடுவார். அத்துடன் கடினமான உழைப்பாளியாகவும் இருந்தார். அதனால எனக்கு அப்பவே அவர் பெரிய ஆளா வந்துடுவாருன்னு தெரியும். அதேபோல் அவரும் பெரிய ஆள வந்துட்டாரு. ஏ.ஆர் முருகதாஸுக்கு காமெடி சென்ஸ் அதிகம். அதைப் பற்றிய நுணுக்கங்களும் அவருக்கு நன்றாகத் தெரியும். நல்ல ஓவியம் வரைவார். அவரும் வருவாருன்னு எதிர்பார்த்தேன், ஆனால் இப்படி வருவாருன்னு எதிர்பார்க்கல. 'தீனா', 'கஜினி, 'துப்பாக்கி'ன்னு படத்தை எங்கேயோ தூக்கிட்டு போய் பெரிய இயக்குநராகிட்டார். இந்த உயரத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏ.ஆர். முருகதாஸ் உயரம் தான் சின்னது, ஆனா அவர் அடைந்த உயரம் ரொம்ப பெரியது" எனத் தெரிவித்துள்ளார்.