அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் மைக்கல் தங்கதுரை கதாநாயகனாகவும், கவிப்பிரியா கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் ஆரகன். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பேரரசு, சுப்ரமணிய சிவா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
இதில் பேசிய இயக்குநர் பேரரசு, “பொன்னியின் செல்வன் ஒரு படம் அல்ல, அது ஒரு சவால்.. எம்ஜிஆர், கமல் ஆகியோர் காலத்தில் முயற்சித்து முடியாமல் போனதை, இப்போது மணிரத்னம் சாதித்திருக்கிறார். திருப்பாச்சி படத்தை இயக்க ஆரம்பித்த சமயத்தில் சினேகன் எனது படத்தில் பாடல் எழுத வேண்டும் என விரும்பினேன். அப்போது அவரிடம் சொல்வதற்காக நானே டம்மியாக சில வார்த்தைகளைப் போட்டு இப்படித்தான் பாடல் வேண்டுமென எழுதி வைத்திருந்ததை அவரிடம் காட்டினேன். அதை பார்த்துவிட்டு இந்தப்பாட்டே நல்லா தான் இருக்கு என்று கூறி பாட்டு எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்தார். எனக்குள் இருந்த கவிஞனை வளர்த்துவிட்ட சினேக கவிஞன் அவர். விஜய்யும் அதற்கு உற்சாகம் கொடுத்தார்.
கடந்த 50 வருடங்களாக தமிழகம் வளர்ந்தது திராவிடர்களால் என்று இயக்குனர் சுப்பிரமணிய சிவா இங்கே பேசினார். ஆனால் அது உண்மை அல்ல. தமிழர்களால் தான் தமிழகம் வளர்ந்தது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் தமிழறிவால் தான் கதை எழுதினார்களே தவிர, திராவிட அறிவால் அல்ல. வெளிநாட்டிலிருந்து இங்கே படம் தயாரிக்க வருபவர்கள் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இங்கிருப்பவர்களோ வெளியூருக்கு ஓடுகிறார்கள், கதாநாயகி கவிப்ரியா பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான அழகுடன் அழகாக காட்சியளிக்கிறார்.
இப்போதெல்லாம் குடும்பப்பாங்காக நடிக்கும் பல நடிகைகள் சோசியல் மீடியாவில் கவர்ச்சியாக தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும் .குடும்பப் பெண் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகிகள் கவர்ச்சி பக்கம் செல்லவே கூடாது. அப்படி தடம்மாறி செல்பவர்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். உங்கள் பலமே அந்த குடும்பப் பாங்கு தான், அப்படி மாறினால் அவர்களது மார்க்கெட்டே காலியாகி விடும்" எனத் தெரிவித்துள்ளார்.