Skip to main content

”’ஐயா’ தொடங்கி என்னுடைய எல்லா படத்திலும் அந்த விஷயம் இருக்கும்” - இயக்குநர் ஹரி பேட்டி

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

 Director Hari

 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'யானை' திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ஹரியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் யானை படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"கமர்ஷியலான விஷயங்களைத் தாண்டி எமோஷனலான விஷயங்கள் படத்தில் நிறைய உள்ளன. படம் பார்ப்பவர்களை ரொம்பவும் கவரக்கூடிய விஷயங்களாக அவை இருக்கும். எந்த மாதிரியான படமாக இருந்தாலும் சரி, மக்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்கத் தயாராக உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை படம் எண்டர்டெய்ன் செய்யவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். அப்படி ஒரு படத்தைக் கொடுத்தால் நம்முடைய படம் நிச்சயம் வெற்றிபெறும்.

 

ஒவ்வொரு படத்திலுமே முடிந்த அளவிற்கு நாம் அப்டேட்டாக முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறோம். சினிமா என்பது இயக்குநரை மட்டும் சார்ந்ததல்ல. பலருடைய கூட்டு முயற்சிதான். என்னுடைய ஐயா படத்திலிருந்தே அந்தந்த காலகட்டத்தில் என்னென்ன விஷயங்கள் புதிதாகப் பழக்கத்திற்கு வருகிறதோ அதையெல்லாம் படத்தில் கொண்டுவர முயற்சி செய்துள்ளேன். ஐயா படம் வந்த சமயத்தில்தான் லேப்டாப் அனைவரது கைகளிலும் அதிகமாகப் புழங்க ஆரம்பித்தது. ஐயா படத்தில் சரத்குமார் பெரும்பாலும் கையில் லேப்டாப் உடன்தான் இருப்பார். என்னுடைய எல்லா படங்களிலும் இது மாதிரி ஏதாவது வைத்திருப்பேன். நீங்கள் கவனித்தால் தெரியும்.

 

யானைதான் அருண் விஜய்க்கு நான் சொன்ன முதல் கதை. இந்தக் கதையைச் சொல்லும்போதே உங்களுக்குக் கதை பிடித்தாலும் நீங்க இப்ப பண்ணா பொருத்தமா இருக்குமானு பாருங்க என்று சொல்லித்தான் கதையே சொன்னேன். படத்தில் பிரியா பவானி சங்கர், போஸ் வெங்கட், ராதிகா, சமுத்திரக்கனி எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் கே.ஜி.எஃப் கருடன் ராம் வில்லனாக நடித்துள்ளார். 

 

படத்தில் நாலு ஃபைட், இரண்டு சேஸ் இருந்தாலும்கூட யாருமே கெட்டவர்கள் கிடையாது. சூழ்நிலைதான் படத்தில் வில்லன். வழக்கமாக என்னுடைய பட மேக்கிங்கில் ஒரு வேகம் இருக்கும். ஆனால், யானை படத்தில் கதையிலேயே ஒரு வேகம் இருக்கும்.  

 

அருண் விஜய்யின் வெற்றிக்கு அவரது கடின உழைப்புதான் காரணம். வெறும் திறமையை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றிபெற்றுவிட முடியாது. திறமையோடு கடின உழைப்பும் இணையும்போதுதான் வெற்றி கிடைக்கும். நமக்கான நேரம் வரும்போது உழைப்போம் என்று இல்லாமல் எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்கக்கூடியவர் அருண் விஜய். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து இன்றைக்கு மிகப்பெரிய உயரத்திற்கு வந்துள்ளார். அருண் விஜய் படம் என்றால் அதில் தரமான விஷயம் ஏதாவது இருக்கும் என்று நம்பி ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். யானை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும்". இவ்வாறு இயக்குநர் ஹரி தெரிவித்தார்.

 


சார்ந்த செய்திகள்