சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம்தான் சில நேரங்களில் அது சமூக ஊடகங்களைக் கடந்து வழக்குகளாகவும் போராட்டங்களாகவும் உருவெடுப்பதும் உண்டு. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு இருக்கிறது. அதை யூ-ட்யூபர்களும், சோஷியல் மீடியா பிரபலங்களும் நன்றாகப் பயன்படுத்துகின்றனர். லேட்டஸ்ட் சர்ச்சையாக ‘கந்த சஷ்டி’ கவசம் குறித்த வீடியோவும், இன்னொருவர் வரைந்த கார்ட்டூனும் பல விவாதங்களை எழுப்பி வருகின்றன. பொதுவாக சினிமா பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் எந்தச் சார்பும் எடுக்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள். வெகுசிலரே கருத்துத் தெரிவிப்பார்கள்.
அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான கவுரவ் நாராயணன் வீடியோ வெளியிட்டு தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "மாதா, பிதா, குரு, தெய்வம்... ஏன் இதில் தெய்வத்தை நான்காவதாக வைத்திருக்கிறார்கள் தெரியுமா? ஒரு நல்ல தாயின் மூலமாகத்தான் தந்தை யாரென தெரியும், ஒரு நல்ல தந்தையின் மூலமாகத்தான் குரு யாரென தெரியும், ஒரு நல்ல குருவின் மூலமாகத்தான் தெய்வம் யாரென தெரியும். அதனால் இந்த மூன்றும் சரியாக அமையாதவர்களுக்குத்தான் கடவுள் கண்ணனுக்குத் தெரியமாட்டார்.
'கறுப்பர் கூட்ட'த்திற்கு கடவுள் இல்லை என்பது அவர்களது நம்பிக்கை, அப்படியே இருந்துவிட்டுப் போகிறது. எங்களுடைய நம்பிக்கையில் கடவுள் இருக்கிறார்கள். அதை அசிங்கப்படுத்துவதில் என்ன சந்தோசம் உங்களுக்குக் கிடைத்துவிடப் போகிறது. கடவுள் இல்லை என்று சொல்வதற்கு ஆயிரத்திற்கும் மேல் கருத்துகளை முன் வைப்பீர்கள். ஆனால், எங்களுக்குக் கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கு ஒரே கருத்து எங்களின் நம்பிக்கைதான்.
அதை அசைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் ஆடிப்போய் விடுவீர்கள். உங்களைப் போல எத்தனையோ பேர் கடவுள் இல்லை எனச் சொல்லிவிட்டு கோவில்களில் அரோகராகவும், கோவிந்த கோஷமும் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அதனால் மதத்தின் பெயராலோ, கடவுளின் பெயராலோ தயவு செய்து கலவரத்தை உண்டு பண்ணாதீர்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.