கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் ஓடும் காரில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வந்த திலீப் வழக்கின் சாட்சியங்களை அழிக்க முற்பட்டதாகவும், விசாரணை அதிகாரியை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கேரள உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்கு நாளுக்கு நாள் புதிய புதிய திருப்பங்களையும் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “மலையாள சினிமாவில் ஒரு சக்தி வாய்ந்த பிரிவினரால் தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாகவும், தொழில் போட்டி காரணமாகவும் இந்த வழக்கு புனையப்பட்டது. எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியரும், பாதிக்கப்பட்ட நடிகையும், கேரள மாநிலத்தில் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒரு உயர் போலீஸ் அதிகாரியும் சேர்ந்து என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.