Skip to main content

பொம்மன் - பெள்ளி தம்பதியிடம் கொஞ்சி விளையாடும் தருமபுரி குட்டி யானை - வீடியோ வைரல்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Dharmapuri baby elephant playing with bomman belly couples

 

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பணியாளர்களாக பணியாற்றுகின்றனர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி. தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். இதனை ஆவணக் குறும்படமாக 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற தலைப்பில் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் விருது வாங்கி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தது. 

 

இந்த நிலையில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர் புதிதாக ஒரு குட்டி யானையை வளர்க்கவுள்ளனர். இந்த குட்டி யானை சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கோடுபட்டி அருகே காட்டிலிருந்து தாயைப் பிரிந்து அந்தப் பகுதியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறுதலாக விழுந்தது. இதனையறிந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த வனத்துறை குழுவினர் யானைக் குட்டியை கயிறுகட்டி மேலே தூக்கி காப்பாற்றினர்.

 

வெளியே கொண்டு வரப்பட்ட யானைக் குட்டியை ஆசுவாசப்படுத்தி வனத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அந்த யானைக் குட்டியை முதுமலையில் உள்ள யானைப் பாகன் பொம்மனிடம் கொடுத்து வளர்க்கலாம் என வனத்துறை முடிவு செய்தது. அதற்காக யானை குட்டியானது பின்பு முதுமலை சரணாலயத்திற்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த யானை குட்டியை பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வருகின்றனர். அப்போது அந்த குட்டி யானை அந்த தம்பதியுடன் கொஞ்சி விளையாடும் காட்சியை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு அவரது ட்விட்டர் பக்கத்தில், யானை பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளதாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்