Skip to main content

“வெற்றிமாறனுக்கும் நான் தனியா நன்றி சொல்லணுமா?” மேடையில் தனுஷ் உருக்கம்

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் வெளியாகி பல தரப்பு மக்களையும் ஈர்த்து, சென்றாண்டின் சிறந்த படங்கள் லிஸ்டில் இடம் பிடித்தது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மேலும்,  டீஜே, கென் கருணாஸ், அம்மு அபிராமி, பவன், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் 100 நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
 

dhanush

 

 

இதில் தனுஷ், வெற்றிமாறன், தாணு, ஃபைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். அப்போது தனுஷ்  தனக்கும் வெற்றிமாறனக்கும் எப்படி இந்த பந்தம் ஏற்பட்டது என்பதை உருக்கமாக தெரிவித்தார்.

“வெற்றி சாரை எனக்கு  ‘அது ஒரு கனா காலம்’ ஷூட்டிங்கிலிருந்தே தெரியும், அதில் தூக்கத்திலிருப்பவர் அம்மாவை நினைத்து திடீரென எழுந்து அழ வேண்டும் அப்படி ஒரு காட்சி இருந்தது. நான் அப்போது ரொம்ப சின்ன பையன் 20 வயதுதான் ஆகியிருந்தது. அதனால் யாரிடம் எப்படியெல்லாம் நடந்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் எனக்கு தெரியாது. அப்போது அந்த காட்சியை நான் நடிக்க வேண்டும். அதற்கு முன்பாக பாலுமகேந்திரா சாரிடம், வெற்றியை நடித்துக்காட்ட சொல்லுங்க, ஒருமுறை அவர் எப்படி பண்ணுகிறார் என்பதை பார்த்துக்கொண்டு நான் நடிக்கின்றேன் என்று சொன்னேன். பொதுவாகவே ஒரு ஷூட்டில் துணை இயக்குனர் அல்லது உதவி இயக்குனரை திடீரென அழைத்து நடித்துக்காட்டு என்று சொன்னால், யாராக இருந்தாலும் திகைத்துபோய் நிற்பார்கள். ஆனால், வெற்றியோ கையில் வைத்திருந்த பேப்பர், பேடையும் எல்லாம் போட்டுட்டு, உடனடியா போசிஷனுக்கு போய் நடிக்க தொடங்கினார். பாலுமகேந்திரா சார் போதும் என்று சொல்கிற வரை அழுது காட்டி நடித்துக்கொண்டிருந்தார். எனக்கு ஒரு சமயம் தப்பு பண்ணிட்டோமோ என்று தோன்றியது. அதை அடுத்து நான் நடித்தேன். ஆனால், அவர் நடித்ததுபோல நான் நடிக்கவில்லை, வேறுமாதிரி நடித்தேன். 

இருந்தாலும் எனக்கு ஒரு மாதிரி குழப்பமாகவே இருந்தது. அதையே யோசித்துக்கொண்டே இருந்தேன். அதை பாலுமகேந்திரா சார் கவனித்துவிட்டார். உடனடியாக என்னை கூப்பிட்டு, ‘என்ன யோசிக்கிற’ என்று கேட்டார். நான் நடித்ததுதான் படத்தில் வரும் என்று எனக்கு தெரியும். ஆனால், ஷூட்டில் வெற்றியும் நானும் நடித்ததில் எது உங்களுக்கு பிடித்திருந்தது. நீங்கள் இரண்டிற்கும் ஒரே ரியாக்‌ஷன் தான் கொடுத்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நீ என்னுடைய இரு மகன்களில் யார் சிறந்தவர்கள் என்று கேட்கிறாய். என்னால் இதற்கு பதிலளிக்க முடியாது’ என்று சென்றுவிட்டார். பாலுமகேந்திரா சார் அவருடைய பிள்ளைகளாக எங்கள் இருவரையும் பார்த்தார். அப்போதிலிருந்து நானும் வெற்றியும் சகோதர்களாகவே இருக்கின்றோம். இதில் நான் வெற்றிக்கு தனியா நன்றி சொல்ல வெண்டுமா என தெரியவில்லை. ஆனால், என்னதான் அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும், தொழில்முறையாக அவருக்கு நன்றி சொல்கிறேன்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்