மலையாளத்தில் மோகன்லால் நடித்த கூதாரா, துல்கர் சல்மான் நடித்த செகண்ட் ஷோ மற்றும் குரூப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். இவர் கடைசியாக எடுத்த குரூப் படம் கேரளாவில் நடைபெற்ற மிகப்பெரிய குற்றச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்ரீநாத் ராஜேந்திரன் மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி ஒரு படம் இயக்கவுள்ளார். பிரீத்தி அகர்வால், சேதன் உன்னியல் எழுதியுள்ள ‘மணிராம்’ என்ற புத்தகத்தைத் தழுவி அதே தலைப்பில் இயக்கவுள்ளார். மணிராம் புத்தகம் ஹரியானாவை சேர்ந்த மோசடி மன்னன் என அழைக்கப்படும் தானி ராம் மிட்டல் வாழ்கை கதையை பற்றியது. இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருட்டுகளிலும் குறிப்பாக கார் திருட்டுகளில் அதிகம் ஈடுபட்டுள்ளார். மேலும் நீதிபதியாக ஆள்மாறாட்டம் செய்து குற்றவாளிகளை விடுவிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாகத் தனது 85வது வயதில் சமீபத்தில் காலமானார்.
இந்த நிலையில் மணிராம் படம் இந்தியில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் திரைக்கதை எழுதும் பணி தற்போது நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.