மம்மூட்டி நடிப்பில் 2022ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான படம் புழு. ரதீனா என்ற பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் ரதீனாவுன் கணவர் ஷர்ஷத் சில தினங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில், இப்படம் குறித்து பேசியிருந்தார். அவர், இந்த படம் ஒரு சமூகத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டு இந்த படத்தில் நடித்தற்காக மம்மூட்டியையும் விமர்சித்திருந்தார்.
இது தற்போது சர்ச்சையாக மாறி சமூக வலைதளங்களில் மம்மூட்டிக்கு எதிராக சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதாவது மம்மூட்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்திவிட்டதாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் மம்மூட்டிக்கு ஆதராக அரசியல் கட்சி தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள அமைச்சர், வாசுதேவன் சிவன்குட்டி, “இந்த வேலையெல்லாம் கேரளாவில் எடுபடாது. மம்மூட்டி கேரளாவின் பெருமை” என அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதே கட்சியை சார்ந்த மற்றொரு அமைச்சர், கே.ராஜன், அவரது சமூக வலைதளப்பக்கத்தில், “மம்முட்டியை முகமது குட்டி என்றும், கமலை கமாலுதீன் என்றும், விஜய்யை ஜோசப் விஜய் என்றும் அழைக்கின்றனர். அதுதான் மதவாதிகளின் அரசியல். ஆனால், கேரளா மண் முற்றிலும் வேறுபட்டது. அவர்களின் மதவாத அரசியலுக்கு இங்கு இடமில்லை” என பதிவிட்டுள்ளார்.
பின்பு,அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “மாநிலத்தின் மதச்சார்பற்ற சமூகம் இதுபோன்ற பிரச்சாரத்தை ஆதரிக்காது. தெளிவான அரசியல் பார்வையும் நடிப்புத் திறமையும் கொண்ட ஒருவரை எவ்வளவுதான் முத்திரை குத்த முயன்றாலும் கேரள மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். வெறுப்பு பிரச்சாரங்களின் விஷமனத்தால் நடிகரை பாதிக்கப்படாமல் மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்கள் மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார்” என அவரது சமூக வலைதளப்பக்த்தில் பதிவிட்டுள்ளார்.