Skip to main content

மீண்டும் ஆஜராக விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

 Court orders Vishal to appear again regards lyca case

 

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர் நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். 

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். மேலும் தொகையைச் செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களைத் திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது எனத் தடை விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தது. அடுத்த விசாரணையில் லைகா நிறுவனம் சார்பில் நடிகர் விஷால் இன்னும் ரூ. 15 கோடியை நீதிமன்றத்துக்குச் செலுத்தவில்லை என்றும், நீதிமன்றத்துக்குத் தவறான தகவலைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டு வாதிடப்பட்டது. பின்பு அவர் நடிப்பில் உருவான 'மார்க் ஆண்டனி' படத்தை வெளியிடத் தடை விதித்து விஷால் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. 

 

பின்பு நீதிபதி உத்தரவின்படி விசாரணைக்கு நேரில் ஆஜரானார் விஷால். அப்போது கடந்த 2021 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான விஷாலின் 4 வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவருடைய குடும்ப உறவினர்களின் அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்யவும் வங்கிக் கணக்கில் முரண் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி விஷாலை எச்சரித்தார். மேலும் மார்க் ஆண்டனி படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி விசாரணையை ஒத்திவைத்தார். அதன் பிறகு சொன்ன தேதியில் படம் வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.  

 

இந்த நிலையில், இந்த வழக்கனது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதே சமயம், நான்கு வங்கிக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்தின் விவரங்களின் ஆவணங்களும் விஷால் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் வருகிற 22 ஆம் தேதி விஷாலை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்பு, பிற்பகலில் விஷால் தரப்பு வழக்கறிஞர், நீதிபதியிடம் விஷால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரிக்கை வைத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, விஷால் வருகிற 22 ஆம் தேதி நேரில் ஆஜராக வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்