Skip to main content

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் ; விஷாலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

court order to vishal regarding lyca filed case against him

 

 

நடிகர் விஷால், நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுமையாக திருப்பி செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

 

பின்பு விஷால், இந்த கடன் தொகையை செலுத்தாமல் 'வீரமே வாகை சூடவா' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடவும் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை தடை விதிக்க கோரியும் உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விஷால் தரப்பிற்கு ரூ.15 கோடி ரூபாயை உயர் நீதிமன்றம் தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி விஷாலை இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரான விஷால், லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்ததால் இந்த பணத்தை செலுத்தவில்லை என்றும், ஒரே நாளில் தனக்கு ரூ.18 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த பணத்திற்காக தான் வட்டி கட்டி வருவதால் இன்னும் ஆறு மாதம் வரை பணம் செலுத்த இயலாது எனக் கூறினார். 

 

இதற்கு லைகா தரப்பில் தொடர்ந்து படங்களில் நடிக்கும் விஷால் தவறான தகவல்களை கூறுகிறார் என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்பு வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினமும் நீதிமன்றத்தில் விஷால் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்