சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,69,610 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 110 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா அதிகம் பரவாமல் தடுக்க மால்கள், சினிமா அரங்குகள் போன்ற பல பொது இடங்கள் மற்ற மாநிலங்களில் முடப்பட்டுள்ளன. இதே போன்ற நடவடிக்கை விரைவில் தமிழ்நாட்டிலும் கொண்டுவரப்படலாம் என்று சொல்லப்படுகின்றது.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், “அரசு உத்தரவு இன்னும் எங்களுடைய கைக்கு வரவில்லை. அரசு உத்தரவு கிடைக்க பெற்றதும், சினிமா தியேட்டர் மூடப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் வழக்கம்போல் படங்கள் திரையிடப்பட்டன. எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் போன்ற இடங்களில் உள்ள தியேட்டர்கள் மூடப்படும். சென்னையில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.