சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 8,953 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸால் 2.19 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 166 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 15 பேருக்கு குணமாகிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகளவில் மிகவும் பிரபலமான சர்வதேச திரைப்பட விழாவான கான்ஸ் திரைப்பட விழா, ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள வருடா வருடம் கோலாகலமாக நடைபெறும்.
இந்நிலையில் கரோனா பாதிப்பால் கான்ஸ் திரைப்பட விழாவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேன்ஸ் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகமே பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதனுடன் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் எங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கான்ஸ் திரைப்பட விழாவை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் சாத்தியக் கூறுகளை மதிப்பீடு செய்து, பிரான்ஸ் அரசாங்கம், திரைப்பட விழா உயர்மட்ட நிர்வாகிகள், திரையுலக நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசித்து எங்கள் முடிவை தெரியப்படுத்துவோம். அதே நேரத்தில் பிரான்ஸ் அதிபரின் முழு அடைப்பு உத்தரவை அனைவரும் மதித்து இது போன்ற இக்கட்டான சூழலில் ஒட்டுமொத்த உலகத்தோடும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.