
இசைஞானி இளையராஜா 35 நாட்களில் எழுதி முடித்த முழு சிம்பொனியை ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்பொனியை எழுதி, சர்வதேச அளவில் அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
இதனைத் தொடர்ந்து லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு இளையராஜா சந்தித்த முதல்வர் ஸ்டாலின் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி மாபெரும் சாதனை படைத்ததாகக் கூறி பாராட்டு தெரிவித்தார். மேலும் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மாணியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், லண்டனில் இளையராஜா வெற்றிகரமாக சிம்பொனி நிகழ்ச்சியை முடித்ததற்காக அவருக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவரது 50 ஆண்டுகள் திரையிசைப் பயணத்தின் நிறைவையொட்டி ஜூன் 2 இளையராஜா பிறந்தாளன்று இந்த விழா நடக்கவுள்ளதாகவும் கூறினார்.
இளையராஜா ஜூன் 3 பிறந்தநாள் அன்று பிறந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளும் ஜூன் 3 அன்று வருவதால் தனது பிறந்தநாளை ஒரு நாள் முன்னாடி ஜூன் 2 அன்று கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞர் தான் இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தை சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.