ஹாலிவுட்டில் தனக்கென ஒரு மேக்கிங் ஸ்டைலை உருவாக்கி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய 'இன்செப்ஷன்', 'தி டார்க் நைட் ரைசஸ்', 'இண்டெர்ஸ்டெல்லர்', ‘டெனெட்' உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கடைசியாக 'ஓப்பன்ஹெய்மர்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை மையப்படுத்தி கடந்த ஆண்டு ஜூலையில் வெளியாகியிருந்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாகவும் 2026 ஜூலையில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம், டியூன் ஆகிய படங்களில் நடித்த ஜெண்டயா மற்றும் தி டார்க் நைட் ரைசஸ், இண்டெர்ஸ்டெல்லர் படங்களில் நடித்த அன்னே ஹாத்வே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவியும் தயாரிப்பாளருமான எம்மா தாமஸ் ஆகியோருக்கு இங்கிலாந்தில் சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அந்நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில், இவர்களுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார். இந்த பட்டம் சமூகத்தில் கலை, அறிவியல், தொண்டு மற்றும் பொது சேவை உள்ளிட்ட துறைகளில் அளப்பரியான பங்களிப்பை அளித்த நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது பார்க்கப்படுகிறது. இந்த பட்டம் பெற்றவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ‘சர்’ என போட்டுக்கொள்வர்.