53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும் இந்த விழா வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்று நடந்த தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், திரைப் பிரபலங்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட திருவிழாவில் இந்தாண்டிற்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருது பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விருது முன்னதாக ரஜினிகாந்த், எஸ்.பி.பாலசுப்ரமணியம், அமிதாப்பச்சன் உள்ளிட்ட முக்கியத் திரைப் பிரபலங்கள் சிலருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
1978-ல் தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த சிரஞ்சீவி, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்போதும் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது 'வால்டர் வீரய்யா' மற்றும் 'போலா சங்கர்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.