கரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலி பணியாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் சினிமாவில் பணிபுரியும் தினசரி தொழிலாளர்கள் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு திரைத்துறையை சார்ந்தவர்கள் அவ்வப்போது உதவிகள் செய்து வரும் நிலையில், சினிமா தொழிலாளர்கள் குறித்து நடிகர் சிரஞ்சீவி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
"அனைத்து திரைப்பட சங்கங்கள், அமைப்புகள், திரைப்பட பத்திரிகையாளர்களோடு சேர்த்து, ஆந்திராவில் இருக்கும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு முன்பு கொடுத்தது போல் இம்முறை ஆந்திரா, தெலங்கானாவில் இருக்கும் பிரதிநிதிகள், போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள் என அனைவருக்கும் உதவி சென்று சேர வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளோம். எங்கள் கரோனா நெருக்கடி நற்பணி மூலமாக மொத்தம் 10,000 பேருக்கு நல உதவிகள் தரப்படவுள்ளன.
இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கண்டிப்பாக இந்த நிலை நிரந்தரமல்ல, தற்காலிகமான ஒன்றே. இதை எதிர்த்து நாம் தைரியமாக நிற்போம். மீண்டும் வேலை செய்யும் நல்ல நாட்கள் பக்கத்தில் உள்ளன. உங்கள் குடும்பத்துக்கு இப்போது முக்கியமான தேவை உங்கள் ஆரோக்கியம். நமக்கு ஒன்றும் ஆகாது என்று அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். தயவு செய்து, என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து உங்களைக் காத்துக்கொண்டு உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்" என கூறியுள்ளார்.