கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், நோரா ஃபதேஹி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடந்தது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நடிகை சாஹத் கன்னா சுகேஷ் சந்திரசேகர் பற்றி தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "சந்திரசேகரின் உதவியாளர் ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு என்னை அழைத்தார். ஆனால், அங்கு என்னை சிறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த சுகேஷ் ஒரு ஆடம்பரமான சட்டையுடன் தங்கச்சங்கிலி அணிந்திருந்தபடி இருந்தார். தன்னை ஒரு பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி சேனலின் உரிமையாளர் என்றும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மருமகன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தேர்தலின் போது இவிஎம்-ஐ சேதப்படுத்திய வழக்கில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறையில் விஐபியாக நடத்தப்படுவதாகவும் கூறினார். நான் என்னை ஏன் இங்கு அழைத்தீர்கள்? என் ஆறுமாத குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வந்தேன் என்றேன். அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே திடீரென மண்டியிட்டு, என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னார். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன எனக் கோபமாகக் கத்தினேன். அதற்கு அவர் உன்னுடைய கணவன் உனக்கு சரியான நபர் கிடையாது. உன் குழந்தைகளுக்கு அப்பாவாக நான் இருக்கிறேன் என்றார். இதைக் கேட்டவுடன் நான் அழத் தொடங்கிவிட்டேன்.
அப்போது சிறையில் யாரோ ஒரு நபர் அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி ரூ. 10 லட்சம் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்தார். அந்த வீடியோ வெளியானால் எனது திருமண வாழ்க்கை பாதிக்கும் எனக் கவலைப்பட்டு பணம் கொடுக்க ஒப்புக்கொண்டேன். இருப்பினும், அது என் திருமண வாழ்க்கையை பாதித்தது. நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம். இப்போது நான் வருத்தப்படுகிறேன். அந்த நபர் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்க வேண்டும். அடுத்தடுத்து தொடர்ந்து பல நிகழ்வுகள் நடந்து வந்ததால் அதில் இருந்து வெளியே வர மட்டுமே சிந்தித்தேன்" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 4 நடிகைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்குச் சென்று சுகேஷ் சந்திரசேகரை சந்தித்து பணம் மற்றும் பரிசுப்பொருட்களைப் பெற்று வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த 4 நடிகைகளில் சாஹத் கன்னாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.