
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரென பிரேத பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இந்த தற்கொலை இந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், அதை அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி கொடுத்ததாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. மேலும் பாலிவுட்டில் நெப்போசிட்டத்தால் சுஷாந்த் சிங் கொல்லப்பட்டார் என சமூக வலைதளங்களில் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுஷாந்த் சிங்கின் தந்தை, நடிகை ரியாதான் தன் மகனை தற்கொலை செய்ய தூண்டியதாக பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு நடிகை ரியாவும் சுஷாந்த் சிங்கின் சகோதரி மீது வழக்கு மும்பை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இரு வழக்குகளும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப் பட்டது. பல மாதங்களாக இந்த இரு வழக்குகளையும் விசாரித்து வந்த சி.பி.ஐ. தற்போது இறுதி அறிக்கையைச் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் நடிகை ரியாவுக்கு இந்த மரணத்தில் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.