ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'யானை'. 'ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு வருகிறது.
இந்நிலையில் 'யானை' படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும், படத்தைத் தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு படத்திற்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள மனுவில், 'யானைத் திரைப்படத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம்- பாம்பன் பகுதி மீனவர்களை சமூக விரோதிகளை போல சித்தரித்துள்ளதாகவும், கூலிப்படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் சித்தரித்துள்ளார்கள்' என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 'படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், கச்சத்தீவு பிரச்சினை குறித்து இடம்பெறும் காட்சியை தங்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அவர்கள் அணுகியுள்ளதாகவும்' சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு கடலையே நம்பி, கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு, உயிரை பணயம் வைத்து நடுக்கடலில் மீன் பிடித்து ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் தங்களை, சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்களான மீனவர்களை அவமதிக்கும் வகையில் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கோரியுள்ளார்.
இவரது மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் விஸ்வநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காணொளி காட்சி மூலம் ஆஜரானார். அப்போது அவர் ஆஜராவதில் இடையூறு ஏற்பட்டது. எனவே இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.