Skip to main content

"விஜய்யுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்" - புஸ்ஸி ஆனந்த்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

bussy anadh about vijay makkal iyakkam meeting

 

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜூன் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

 

அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யத் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர், தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதோடு 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 'தளபதி விஜய் பயிலகம்' என்ற இரவு பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டது. 

 

இதனிடையே பனையூரில் தனது மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோனை நடத்தினார். இந்நிலையில் அவரது மக்கள் இயக்கத்தில் வழக்கறிஞர் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களுடன் இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விஜய் வெளிநாட்டில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த புஸ்ஸி ஆனந்த், "இயக்கத்தில் இளைஞர் அணி, மாணவர் அணி, வர்த்தக அணி, விவசாய அணி என பல்வேறு அணிகள் இருக்கிறது. வழக்கறிஞர்கள் அணி பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு இருந்தது. அதை ஒருங்கிணைத்து அனைத்து மாவட்ட வழக்கறிஞர்களும், மாவட்ட தலைவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எல்லோரும் அவர்களை அழைத்து கொண்டு வந்தார்கள். ஆலோசனையில் அவர்கள் சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அதையெல்லாம் தளபதியுடைய கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆலோசனை நடத்தவுள்ளோம். இலவச சட்ட ஆலோசனை மையம் சென்னையில் தொடங்கவுள்ளோம். விஜய் வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கிறார். இப்போதைக்கு சென்னை வரமாட்டார்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்