ஒரு காலத்தில் ரிக்ஷா ஓட்டுபவர்கள், மூட்டை தூக்குபவர்கள், காலணி தைப்பவர்கள் என தொழிலாளர்கள் பிரச்சனை, பின்னொரு காலத்தில் சாதிப் பிரச்சனை, பிறகு லஞ்சம் - ஊழல் என அவ்வப்போது தமிழ் சினிமா கதாசிரியர்களுக்கு ஒரு சமூக பிரச்சனை கிடைக்கும். முழு திரைப்படத்தையும் அந்த பிரச்சனையை அடிப்படையாக வைத்து எடுப்பது ஒரு வகையென்றால், படத்தில் ஏதோ ஒரு காட்சியில், ஒரு வசனமாக அந்தப் பிரச்சனையைப் பேசி கைதட்டல் பெறுவதும் உண்டு. அந்த வகையில் தற்போது இருப்பது விவசாயம். சமீபமாக வெளியான பல படங்களில் ஒரு வசனமோ, காட்சியோ விவசாயத்தைப் பேசுகிறது. சில படங்கள் முழுமையாக விவசாயம் குறித்தும் வருகின்றன.
தீக்காயம் ஏற்பட்டு முகம் முழுவதும் சிதைந்த நிலையில் இருக்கும் ஒருவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை மூலம் மூளைச் சாவு ஏற்பட்ட அதர்வாவின் முகம் பொருத்தப்படுகிறது. அதன்பின் அவர் அதர்வாவின் முகத்துடன் வலம் வருகிறார். அவருக்கு திடீரென பல்வேறு நபர்களால் கொலை முயற்சிகள் நடக்கின்றன. இதனால் அதிர்ந்துபோன அதர்வா கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் யார், அவர்கள் ஏன் தன்னைக் கொல்ல வேண்டும், தனக்கு ஒட்டப்பட்ட முகத்துக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம், தன் முகத்திற்கு சொந்தக்காரர் யார் என்பதை கண்டுபிடிப்பதே பூமராங்.
ஒரு சமூக கருத்துள்ள கதையில் ஆங்காங்கே சின்னச் சின்ன அரசியல் நக்கல் நையாண்டிகளை தூவி த்ரில்லர் பாணியில் ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் ஆர்.கண்ணன். நதிநீர் இணைப்பு என்பது விவசாயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் ஆழமாக சொல்ல முயற்சி செய்துள்ளார். இதற்கு சில இடங்களில் பலன் கிடைத்தாலும் பல இடங்களில் பழைய திரைக்கதை யுக்திகளைப் பயன்படுத்தி இருப்பது சற்று அயர்ச்சி ஏற்படுத்துகிறது. பல இடங்களில் சமகால அரசியலை கிண்டலடிக்கும்படி வரும் வசனவரிகள் ஆங்காங்கே ரசிக்க வைத்துள்ளன. ஆனாலும் கதைக் கருவில் இருந்த அழுத்தம் திரைக்கதையில் குறைவு.
படத்தின் முற்பாதியை விட பிற்பாதியில் அதர்வா நன்றாக நடித்துள்ளார். அதிலும் முக்கியமான இடங்களில் வரும் எமோஷன் காட்சிகளை உணர்ந்து நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அழகாக இருக்கிறார், வந்து போகிறார். இன்னும் நடிக்கத் தொடங்கவில்லை. இந்துஜா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்துள்ளார். இவர்களுக்கு பக்கபலமாக வரும் ஆர்.ஜே பாலாஜிக்கு ரியல் ஆர்.ஜே.பாலாஜிக்கு நெருக்கமான பாத்திரம். ஒரு இடைவேளைக்குப் பிறகு சதீஷின் ஒன் லைனர் காமெடிகள் சிரிக்க வைக்கின்றன. இவர்கள் வரிசையில் கவனம் ஈர்ப்பவர் ரவி மரியா.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன் இசையில் பாடல்கள் ஓகே மட்டும்தான். பின்னணி இசை மிரட்டல். சுகுமாரின் ஒளிப்பதிவில் கிராமத்து பகுதி அருமை.
நதிநீர் இணைப்பு குறித்து செயல்முறை, தகவல்களுடன் எடுக்கப்பட்ட ஒரு நல்ல முயற்சி. கருத்து, சுவாரசியம் சற்று குறைவாக, ஓரளவு வெற்றிகரமாக நம்மை வந்து சேர்ந்திருக்கிறது.