கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன், இந்த முறை வித்தியாசமாக 2 வீடுகள் என ரசிகர்களை வியக்க வைத்துள்ளனர். இந்த நிலையில் போட்டியாளர்களாக இவர் வருவார், அவர் வருவார் எனவெல்லாம் யூகிக்கப்பட்டது. இறுதியில் இவரெல்லாம் வந்திருக்கார்களே என நினைக்க வைத்த கூல் சுரேஷ், பவா செல்லத்துரை, யுகேந்திரன், வனிதா மகள் ஜோவிகா, ஆகிய நால்வரைப் பற்றி பார்ப்போம்.
கூல் சுரேஷ் - சில திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ள இவர் பெரும்பாலும் நெகட்டிவ்ஷேட் உள்ள கதாபாத்திரத்தையே ஏற்று நடித்திருக்கிறார். மேலும் சிம்புவின் தீவிர ரசிகரான இவர், வெந்து தணிந்தது காடு படம் வெளியான சமயத்தில் பல பேட்டிகளில் நகைச்சுவையாக பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் கொடுக்கும் கவுண்டர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அதற்காகவே பல படங்களின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார். அப்படி கலந்துகொண்ட ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கினார். பின்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து தனது வேடிக்கையான செயல்கள் மூலம் ரசிகர்களை எண்டர்டெயின் செய்த கூல் சுரேஷ் இதிலும் அதை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவா செல்லத்துரை - எழுத்தாளராக இலக்கியத் துறையில் பயணிக்கும் இவர், கதை சொல்லியாக மிகவும் பிரபலமானவர். திருவண்ணாமலையை சேர்ந்த இவர், முற்போக்கு பேசும் கதாபாத்திரத்தில் ஜோக்கர் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு பேரன்பு, சைக்கோ என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஜெய் பீம் படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவராக அக்கதாபாத்திரத்திக்கு சரியாக பொருந்தியிருப்பர். பிக் பாஸ் வீட்டிற்குள் கையில் ஒரு புத்தகத்தோடு நுழைந்து பலரது கவனத்தை பெற்ற இவர், தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
யுகேந்திரன் - பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான இவர் தந்தையை போல் பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் அவரை போலவே பல படங்களில் நடித்தும் உள்ளார். அஜித்தின் 'பூவெல்லாம் உன் வாசம்' விஜய்யுடன் யூத், பகவதி, திருப்பாச்சி என ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் வருவது போல் நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வனிதா மகள் ஜோவிகா - நடிகையாக சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டார். இவர் கலந்து கொண்ட சீசனில் கடும் போட்டியாளராக இருந்தார். இந்த நிலையில் அவரது மகளான ஜோவிகா, 18 வயதை கடந்துவிட்ட நிலையில் அம்மாவை போல் கடும் போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.