திரையுலக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நேற்று தயாரிப்பாளர்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தக் குழுவில் தனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், தேனியில் இருக்கும் தன்னிடம் இது குறித்து யாரும் கலந்து பேசாத நிலையில் தன்னிச்சையாக இந்த அறிக்கையை வெளியிட்டவர்களுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்யும் விதமாக இயக்குனர் பாரதிராஜா மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
''முன்னாள் தலைவர்கள் அனுமதியோடு ஒரு குழு அமைக்கப்பட்டதாகப் பட்டியலொன்றும் அதனோடு சேர்ந்த அறிக்கையும் பத்திரிகைச் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. நாகரீகம் என்பது பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது. ஆனால் நான் அறியாமல் எனது பெயரைப் பயன்படுத்தியது சரியல்ல. தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில் பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவை தெரிந்துகொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சனையைத் தீர்ப்பார்கள் என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் என் பெயரை என்னைக் கேட்காமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறான அணுகுமுறை. பத்திரிகையாளர்கள் இச்செய்தி தவறானது என்பதை உணர்ந்து, எந்தவித அனுமதியும் பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
பாரதிராஜா
தேனி''
எனக் குறிப்பிட்டுள்ளார்.