ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஒருசில பிரச்சனைகளால் செயல்படாமல் இருக்கிறது. இதனால் தற்போது படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர். படம் தயாரிப்பு, பட வெளியீடு, பைனான்ஸ் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவே இந்தப் புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சங்கத்தின் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் இச்சங்கம் சார்பாக தலைவர் பாரதிராகா அறிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாரதிராஜா, டி.சிவா, தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு, தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இச்சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இச்சங்கத்தின் தலைவரான பாரதிராஜா பேசுகையில், “திரையரங்க உரிமையாளர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்றால் என்ன பண்ண முடியும். படங்கள் திரைக்கு வர வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம். நீங்கள் அடாவடித்தனமாக சில விஷயங்கள் பண்ணும்போது, வேறு வழிகள் இருக்கின்றன. தொழில் சுதந்திரம் என்பது எங்களுக்கு உண்டு. இந்தப் பொருளை இவர்களுக்குத்தான் விற்கவேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. என்னுடைய பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன், வாங்குகிறவர்கள் வாங்குவார்கள். இல்லையென்றால் எப்படி விற்க வேண்டும் என்று தெரியும்” என்று தெரிவித்தார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் ஒப்பிட்டு, “வலுவுள்ள 100 பேர் பயில்வான் மாதிரி, 1000 பேர் நோஞ்சான்கள் மாதிரி இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இதனால் அதிருப்தியான மற்ற தயாரிப்பாளர்கள் பாரதிராஜா அப்படி கூறியது தவறு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். இந்நிலையில் இதற்கு விளக்கம் தெரிவித்து ட்விட்டரில் பாரதிராஜா பதிவிட்டுள்ளார். அதில், “வணக்கம், என் பாசத்துக்குரிய தயாரிப்பாளர்களே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் "நோஞ்சான்" என்கின்ற வார்த்தை நம் சக தயாரிப்பாளர்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
திரைத்துறையில் முதலாளித்துவமாக இருந்த தயாரிப்பாளர்கள், இன்று யார் யாருக்கோ அடிபணிந்து, ஒடுக்கப்பட்டு செயலற்ற நிலையில் திரியும் அவல நிலையைக் கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைதான் தவிர வேறு எந்த உள்நோக்கத்துடன் நான் கூறவில்லை. மனதைக் காயப்படுத்தும் விதமாக பேசவேண்டும் என்கிற திட்டமிடுதல் இல்லை. இந்த வார்த்தை நம் தயாரிப்பாளர்களை உண்மையிலே காயப்படுத்திருந்தால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அர்த்தம்” என்று தெரிவித்துள்ளார்.