இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் 'முதல் மரியாதை'. ராதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று கிட்டத்தட்ட 200 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் 33வது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ் படத்திற்காக பாரதிராஜாவும் சிறந்த பாடல் வரிகளுக்காக வைரமுத்துவும் விருது வாங்கினர்.
இந்த நிலையில் 38 ஆண்டுகள் கழித்து இப்படம் டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது தமிழ்நாட்டில் உள்ள 67 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு திரையரங்கிற்கு சென்ற பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. சினிமா என்பது பெரிய கலை மற்றும் பொக்கிஷம். நான் சிறு குழந்தையாக இருக்கும் போது அண்ணாந்து பார்த்து வியந்து எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதற்கும், தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் எனக் கற்றுக் கொண்டதற்கும் காரணமானவர் ஒரே ஒரு மனிதன் நடிகர் சிவாஜி கணேசன் தான். சிவாஜி இல்லையென்றால் பாரதிராஜா இல்லை. இன்றளவும் என்னை நடிக்க அழைக்கிறார்கள் என்று சொன்னால் சிவாஜி போட்ட பிச்சை.
இப்படத்திற்கு முதல் மரியாதை என தலைப்பு வைக்கப்பட்டது என பலருக்கு சந்தேகம். என் வாழ்க்கையில் சரஸ்வதி, லட்சுமி, முருகன் என யார் யாரையோ கும்பிட்டுள்ளேன். எங்க அப்பா, அம்மாவுக்கும் மரியாதை கொடுத்துள்ளேன். ஆனால் திரையுலகில் நுழைந்து என்னை வாழ வைத்த தெய்வம் சிவாஜி அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அதை செய்தேன். 50 ஆண்டுகள் கழித்தும் இன்றும் பசுமையாக இருக்கிறது முதல் மரியாதை.
இன்றைக்கும் என் முன்னால் நிறைய மைக்குகள் இருக்கின்றன. என்றைக்கு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில்லாமல் வெட்டப்படுகின்றேனோ அன்றைக்கு தான் என் மரணம். உங்கள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். வாழ்வேன். இன்னும் நீண்ட காலம் வாழ்வேன்" என்றார்.