நான்கு சிறுவர்களை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாழை’. இப்படத்தை மாரிசெல்வராஜ் மனைவி திவ்யா தயாரிக்க டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைற்றது. அதில் படக்குழுவினருடன் இணைந்து வெற்றிமாறன், மிஷ்கின், நெல்சன், உள்ளிட்ட பல இயக்குநர்களும் துருவ் விக்ரம், அனுபாமா, உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டர். மேலும் சில இயக்குநர், நடிகர்களின் வீடியோக்கள் திரையில் காணொளியாக ஒளிபரப்பப்பட்டது.
அந்த வகையில் திரையில் வெளியான காணொளியில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்,“சில நேரம் இந்த சினிமாத் துறையில் வந்துவிட்டோமே என்று நினைப்பதுன்டு. ஆனால் இந்த துறையில் இருப்பது எவ்வளவு புண்ணியம் என்று சில படங்களை பார்க்கும்போது தெரியும். எனக்கு நீண்ட நாட்களாக சிறிய பொறாமை மற்ற மொழிகளில் சத்யசித்ரே போன்ற நல்ல இயக்குநர் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழியில் அவர்களை எல்லாம் மிஞ்சுகிற அளவிற்கு என் நண்பன் மாரி செல்வராஜ் இருக்கிறார். மிகவும் அற்புதமான மனிதர். கதையின் ஓட்டத்தைப் பார்த்து கண்ணீர் விடுவது வேறு. ஆனால் மாரியின் செயல் திறனைப் பார்த்து வியக்கிறேன். அது வாழ்க்கை பரிணாமமாக படத்தில் வரும்போது நமக்கு கண்கள் கலங்குறது. அப்படித்தான் இந்தப் படத்தில் பல இடங்களில் நான் கண்ணீர் விட்டேன். மிகப்பெரிய இயக்குநர் மாரி செல்வராஜ்.
நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இவர். ஏனென்றால் பெங்காலி, மராட்டி மொழிகளில் உள்ள இயக்குநரைப் பற்றி நாம் பேசுகிறோம். இனிமேல் நாம் மாரி செல்வராஜை பற்றித்தான் பேசவேண்டும். இந்திய துணைக் கண்டத்தில் எவ்வளவோ படங்கள் வந்திருக்கிறது. அதில் வாழ்க்கையைச் சொல்லி இருக்கிறார்கள். மாரி இந்த வருடம் மிகச்சிறந்த விருதை வாங்குவான் என்ற பலமான நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அந்த கதைகேற்ற உலகத்தில் வாழ்ந்தவர்களாக மாரி செல்வராஜ் தேர்ந்தெடுத்துள்ளார். படத்தில் யாருமே நடித்த மாதிரி இல்லை, வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு கலைஞனாக நிறைய இடங்கள் மனம் கலங்கியது. இப்படத்தின் பின்னணியில் வரும் காட்சிகளை கூட அச்சு பிசுறாமல் எடுத்துள்ளார். படத்தில் வரும் மண் சட்டி கூட அந்த அளவிற்கு இயல்பாக இருக்கும்.
மாரி நீ இங்கு இல்லாமல் போய்விட்டாய், இல்லையென்றால் உன்னை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்திருப்பேன். என்னுடைய 16 வயதினிலே முதல் படிதான். ஆனால் மாரி செல்வராஜ் இயல்பாக இருக்கக் கூடியதை இப்படத்தில் சொல்லியுள்ளார். ஒப்பனை இல்லாத முகங்கள், தெருக்கள், என அனைத்தையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளார். இவரைப் போன்ற இயக்குநர்கள் தொடர்ந்து வர வேண்டும். மாரி செல்வராஜ் வாழ்ந்த வாழ்க்கையை அந்த சிறுவர்கள் மூலமாக சொல்லிவிட்டார். சினிமா படம் எடுப்பது வேறு, தான் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லுவது வேறு. அதில் மாரி ஜெயிச்சுட்டான். இப்படி ஒரு இயக்குநருடன் பழகியதில் எனக்கு பெருமையாக உள்ளது. மற்ற மொழிப் படங்களில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்லிக்கொள்வோம். இந்த படத்தில் உனக்கு பணம் வருதோ இல்லையோ விருதுகள் கண்டிப்பாக கிடைக்கும், வாழ்த்துகள்” என்றார்.