'ப்ளுசட்டை' என்ற குறும்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் குறும்பட திரையிடல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “பாலசந்தரின் அரங்கேற்றம் படத்திலிருந்து நான் சினிமா விமர்சனம் செய்கிறேன். காலையில் நான்கு மணிக்கு காசு கொடுத்து படம் பார்த்த பிறகுதான் விமர்சனம் எழுதுவேன். 1967ஆம் ஆண்டில் போலீஸுக்கு செலக்ட்டாகி 7 வருடங்கள் எஸ்.ஐ.யாக வேலை பார்த்தேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் செக்யூரிட்டி ஆபிஸராகவும் இருந்திருக்கிறேன். என்.டி.ராமாராவ், சோபன் பாபுவுடன் சினிமாவில் சண்டை போட்டிருக்கிறேன். இதுவரை நான் பொய் பேசியதில்லை. சினிமா சுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் பேசுகிறேன். நான் சினிமாக்காரன் என்பதால் எனக்கு பெண் கொடுக்க மறுத்தார்கள். அந்த வேதனையில்தான் சினிமா நல்லா இருக்க வேண்டும் என்று பேசுகிறேன்.
நான் பொய் பேசமாட்டேன் என்று மக்களுக்குத் தெரியும். மோசமான விமர்சனம் கொடுத்தால் வசூல் பாதிக்கும் என்பதெல்லாம் உண்மையில்லை. வலிமை படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் வந்தது, அதனால் அந்தப் படத்தின் வசூல் கெட்டுவிட்டதா என்ன? நல்ல படங்களை நல்ல படங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். தேவயானி, நதியா உட்பட பல நடிகைகள் பற்றி இதுவரை நான் பேசியதேயில்லை. யார் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்களோ அவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன்.
இந்த விழாவிற்கு வந்துள்ள பல பெண்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். நான் தவறாக பேசுகிறேன் என்றால் என்னுடன் அவர்கள் எப்படி புகைப்படம் எடுப்பார்கள். சமீபத்தில் கமிஷனர் ஆபிஸிற்கு போயிருந்தேன். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், பின்றீங்க சார், விடாதீங்க, கிழிகிழினு கிழிங்க சார்னு சொன்னார்கள். நான் பொய் பேசினால் அந்தப் பாவம் என்னை வந்து சேரும். நான் பேசுவது உண்மை என்றால் அந்தப் பாவம் உங்களை வந்து சேரும்” எனக் கூறினார்.