Skip to main content

இயக்குனர் பாரதிராஜா முதலமைச்சருக்கு வாழ்த்து...

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

பள்ளி படத்திட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சேர்த்ததற்காக இயக்குனர் பாரதிராஜா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

barathiraja

 

 

தமிழ் திரையுலகில் நடிப்புக் கலையின் மூலம் பல மக்களை தன்னுடைய ரசிகர்களாக ஈர்த்தவர் சிவாஜி கணேசன். ஹாலிவுட்டின் சிறந்த நடிகர் என்று போற்றப்பட்ட மார்லோ பிராடோவே சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறார். அந்தளவிற்கு நடிப்பில் பெயர் பெற்றவர் சிவாஜி. 

 

இந்நிலையில் தமிழக அரசு, பள்ளிக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளது. அதில் சிவாஜி கணேசன் பற்றி அப்பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக சேர்த்துள்ளது. இதனைதொடர்ந்து இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

 

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது, "உலகின் மாபெரும் கலைஞன்; தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு; சிறந்த நடிப்புத்திறன் மூலம் 'நடிகர் திலகம்', 'நடிப்புச் சக்கரவர்த்தி' என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்ட செவாலியே சிவாஜி கணேசனைப் பற்றி, மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் கள்ளிக்காடு, தான் சந்தித்த அனுபவங்களைத் தொகுத்து 'சிதம்பர நினைவுகள்' என்ற நூலாக வெளியிட்டார்.
 

இந்த நூலில் மாமேதை சிவாஜி கணேசனின் நடிப்புத்திறன், கலையுலக அனுபவங்கள், பெற்ற விருதுகள் எனப் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
 

இதை, தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு புதிதாக உருவாக்கியுள்ள பாடத் திட்டத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடநூலில் சேர்த்துள்ளது.
 

சிவாஜி கணேசனுக்குப் புகழ் சேர்க்கும் விதமாகவும், இளம் தலைமுறை மாணவர்கள் அவருடைய கலைத்திறனை அறிந்து கொள்ளும் விதமாகவும் பாடத்திட்டத்தில் சேர்த்துச் சிறப்பித்த தமிழக அரசுக்கு, திரைத்துறையின் மூத்த கலைஞன் என்ற முறையில், கலையுலகம் சார்பாகவும், என் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்
" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்