கரோனாவால் மிகவும் பெரிய வகையில் பாதிக்கப்பட்டுள்ளது சென்னை. இதனால் சென்னையிலிருந்து வெளியேறும் யாராக இருந்தாலும் சென்ற இடத்தில் தங்களைத் தானே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் உத்தரவு.
இதனிடையே, தனது சகோதரியைப் பார்ப்பதற்காகச் சொந்த ஊர் தேனிக்குச் சென்ற இயக்குனர் பாரதிராஜாவைத் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி நகராட்சி உத்தரவிட்டது. பின்னர், இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவ, பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், நான் மூன்று முறை டெஸ்ட் எடுத்ததில் கரோனா நெகட்டிவ். இருந்தாலும் மக்களின் நலனுக்காக நானும் என்னுடன் வந்தவர்களும் தேனி வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், போடி அருகே முந்தல் சோதனைச் சாவடியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் புகைப்படத்தில், கரோனா தடுப்புப் பணியின் போது குரங்கணி சென்று திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று கருத்தையும் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகச் சொன்ன பாரதிராஜா சுகாதாரத்துறை அலுவலர்களின் உத்தரவை மீறி வெளியே வந்துவிட்டாரா என்றும், இந்தச் சம்பவம் குறித்து நகராட்சி சேர்ந்த அலுவலர்கள் விசாரணையும் நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.