Skip to main content

“சில சோகங்களை பகிர்ந்து கொள்ள முடியாது” -எஸ்பிபி நினைவுகளை பகிர்ந்த பாரதிராஜா! 

Published on 01/10/2020 | Edited on 01/10/2020
bharathiraja

 

 

பிரபல பாடகர் எஸ்.பி.பி செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவிற்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். தாமரைபாக்கத்திலுள்ள அவரது பண்ணையில் நல்லடக்கம் செய்யப்பட்டார் எஸ்.பி.பி.

 

இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை எஸ்.பி.பிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, மயில்சாமி, இயக்குனர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

இயக்குனர் பாரதிராஜா வீடியோ பதிவின் மூலம் எஸ்பிபி உடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில், "கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ராகதேவனாக இசை மேதையாக நமக்கெல்லாம் உயிர் மூச்சாக இருந்த என் நண்பன் எஸ்பிபி. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. சில சோகங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.

 

50 ஆண்டுக்கும் மேலாக என் நண்பன். அவன் இசை கலைஞன் மட்டுமல்ல, நல்ல மனிதன். பண்பும், பாசமும் நேசமும் கொண்ட ஒரு மனிதன். சின்ன பிள்ளைகளைக் கூட மரியாதையாக கூப்பிடுவான். ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்கு கிடையாது. என் நண்பன் எஸ்பிபி என்னோடு இல்லை என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

 

கோடிக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தோம். ஆனாலும், காலதேவன் நீங்கள் மட்டும் ரசித்திருக்கிறீர்கள் எஸ்பிபியை, தேவதூதர்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக அழைத்துக் கொண்டானோ என்று நான் நினைக்கிறேன். இந்த இழப்புக்கு ஈடு சொல்லவே முடியாது. அவருடைய குடும்பத்தினருக்கு எந்த விதத்தில் ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை.

 

எஸ்பிபி பெயரைக் காப்பாற்ற அவரைப் போல் நல்லவராக இருந்தால் போதும். அது நாம் எஸ்பிபிக்கு செய்ய வேண்டிய ஒரு கடமை. நல்ல பிள்ளைகளை, ரசிகர்களை வளர்த்து விட்டிருக்கிறார் எஸ்பிபி, நல்ல நண்பர்களை வைத்திருந்தான் எஸ்பிபி. உதாரணமாக ஒருவன் வாழவேண்டும் என்றால் எஸ்பிபியைப் போல் வாழ வேண்டும்" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்