தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷாலின் பதவி காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. இதன்பின் இச்சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில் சங்கத்தில் முறைகேடு இருந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனை தொடர்ந்து தமிழக அரசு ஒரு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 30-ம் தேதிக்குள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், ராஜன், முரளி உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது பாரதிராஜா பேசுகையில், “நாங்கள் இந்தப் பதவியில் இருந்தபோது, சங்கத்தின் சொத்துகளை அழிக்காமல் பார்த்துக்கொண்டோம். அதேபோல, ஒரு அரசாங்கத்தை எதிர்த்து இங்கே எந்த பயனையும் அடைந்துவிட முடியாது. எதையும் சாதிக்கவும் முடியாது. ஆகவேதான் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களில் முக்கியமான சிலர் கூடிப் பேசி ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம்.
தேர்தல் இல்லாமல் நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு தலைமையை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் ஆதரவு அளிக்கவேண்டும். தலைமை பதவிக்கு வருபவருக்கு அடையாளம் இருக்கக்கூடாது. நல்லது செய்யவேண்டும் என்கிற ஒரே எண்ணம்மட்டும்தான் இருக்க வேண்டும். பெரியவர்கள் நாங்கள் சொல்கிறோம். இதை கேட்டு தேர்தல் இல்லாமல் ஒரு நல்ல மனிதரை தேர்வு செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
பொது வாழ்வில் குற்றம் செய்யாதவர்கள்தான் தேர்தலில் நிற்க வேண்டும். கடந்த காலங்களில் பதவியில் இருந்த சிலருக்கு இது புரியும். அவர்களாக ஒதுங்கிக்கொண்டால் நல்லது” என்றார்.