பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த படம் 'வணங்கான்'. இப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிப்பதாகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மூன்றாவது முறையாக பாலா மற்றும் சூர்யா கூட்டணி உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்தது.
இதையடுத்து 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலக அவருக்குப் பதிலாக அருண்விஜய் நடிப்பதாகத் தகவல் வெளியானது. மேலும் க்ரீத்தி ஷெட்டியும் கால் ஷீட் பிரச்சனை காரணமாக விலக ரோஷினி பிரகாஷ் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடித்த துணை நடிகை லிண்டா என்ற பெண் படக்குழுவினர் மீது புகார் அளித்துள்ளார். ஜிதின் என்ற நபர், இப்படத்தில் நடிப்பதற்காக கேரளாவில் இருந்து துணை நடிகைகள் சிலரை அழைத்து வந்துள்ளார். அதிலிருந்த நடிகைகளுக்கு 3 நாள் நடிப்பதற்கு மொத்தம் 22 ஆயிரத்து 600 ருபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. ஆனால் சொன்னபடி சம்பளத்தை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜிதினிடம் அந்த குழுவில் நடிக்க வந்த துணை நடிகை லிண்டா கேட்டுள்ளார். அப்போது லிண்டாவை ஜிதின் கடுமையாகத் தாக்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் லிண்டா என்ற பெண் புகார் அளித்திருப்பது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.