சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு பண உதவி செய்தார். 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆட்டோ சேவையை வழங்கியுள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு மூனு மாசத்திற்கு முன்னாடி எங்க ஏரியாவில் உள்ள கடையில் டீ குடிச்சிட்டு இருந்தேன். அப்போது ஒரு பெரியவரை கஷ்டப்பட்டு பஸ்ஸில் ஏத்துனாங்க. அந்த இடமே ட்ராபிக் ஆயிடுச்சு. ஏன்னு கேட்டபோது, அவர் செக்கப்புக்கு மருத்துவமனை போகணும். ஆட்டோவில் போனால் காசு அதிகம் செலவாகுதுன்னு சொன்னார்கள். அதனால் ஆட்டோ கொடுக்க முடிவெடுத்து காசு சேத்து வச்சு கொடுத்தேன்.
மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு அனகாபுத்தூர் பாலத்திலிருந்து, பல்லாவரம், பம்மல், காமராஜபுரம்... இந்த பெல்டில் உள்ள பகுதிகளுக்கு மருத்துவ சேவைக்கு இலவசமாக செல்லும். இப்போதைக்கு காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் செயல்படும். கொஞ்ச நாளுக்கு பிறகு 24 மணி நேரமும் செயல்படுத்த ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கோம். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மத்த இடங்களிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.