சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். கடந்த மாதம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். அண்மையில் தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நிறைய பேர் என்னை பாராட்டுறாங்க. அதே சமயம் எனக்கு பின்னால் யாரோ ஒரு பெரிய ஆள் இருப்பதாக ஒரு சிலர் சொல்றாங்க. அது உண்மைதான். எனக்கு பின்னாடி நிறைய பேர் செயல்படுறாங்க. அவுங்களால மட்டும் தான் இங்க நிற்கிறேன். அது அவமானம், கஷ்டம். இதெல்லாம் தான் பின்னாடி இருந்தது.
அதே போல் எதிர்காலத்தில் நீ சிக்னலில் பிச்சை எடுப்ப, அப்ப கூட உனக்கு நான் பிச்சை போடாம தான் போவேன்... என சொல்றாங்க. நான் எந்த சிக்னல்ல பிச்சை எடுக்கிறேனோ, அதே சிக்னலில் என்னுடைய ஆம்புலன்ஸும் வரும். அது ஒன்னும் பெரிய விஷயமில்லை. என்னால் முடிஞ்சதை நான் கொடுத்துகிட்டு தான் இருப்பேன். எதிர்காலம் என்னை காப்பாத்தும். இந்த உதவிகள் எந்த நோக்கதிலும் பண்ணல. யார்கிட்டயும் காசு வாங்கி பண்ணல. என்னுடைய காசில் மட்டும் தான் பண்ணேன். மொத்தம் 10 தருவதாக சொல்லியிருந்தேன். அதில் 5 கொடுத்து விட்டேன். இன்னும் 5 கொடுப்பேன்” என்றார்.