சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘நான் அவளை சந்தித்த போது’. பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்த சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சாந்தினி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இயக்குனர் கே. பாக்யராஜும் கலந்துகொண்டு பேசினார்.
சமீபத்தில் பாக்யராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது பெண்கள் இடம் கொடுப்பதால்தான் ஆண்கள் அவர்களிடம் எல்லை மீறுகிறார்கள் என்று கருத்தை தெரிவித்தார். இது மிகப்பெரும் சர்ச்சையாக உருவானது. இந்நிலையில் இதுகுறித்து பாக்யராஜ் பேசியுள்ளார்.
அதில், “நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால் தான். எம்.ஜி.ஆர் ஒரு மீட்டிங்கில் பெண்கள் போனபின் ஆண்களிடம் பேச வேண்டும் என்றார். பின் ஆண்களிடம் அவர் சொன்னார், “ரகசியம் ஒன்றுமில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒன்றாக கலைந்து போகும்போது பெண்கள் அவதிப்படக்கூடாது என்று நினைத்து தான் அவர்களை முதலாவதாக போகச் சொன்னேன்” என்றார். அப்படி யோசிக்கக் கூடிய எம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் என்றால் நான் பெண்களை எப்படி மதித்திருப்பேன் என்று புரிந்துகொள்ள வேண்டும். இந்தப்படத்தைப் பார்த்து சில பெண்கள் அழுததாகச் சொன்னதால் எனக்கும் இப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது” என்றார்.